கையேந்தும் மக்கள்! கடைவிரிக்கும் வங்கிகள்!! மீட்சி என்பது எப்போது?
சிவ பாக்கியராஜா
வடக்கிலும் கிழக்கிலும் இப்போது கடனாளிகளின் தொகை கூடுதலாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு நடந்து முடிந்திருக்கும் போர்தான் காரணம் என்று கூறுகிறார்கள்.
போரின் காரணமாக சனங்களின் தொழில் வாய்ப்புகள், வருமானம் தரக்கூடிய வளங்கள், கையிலிருப்பிலிருந்த சேமிப்பு, தேடிய தேட்டங்கள், சொத்துகள் எல்லாம் அழிந்து விட்டன.
போதாக்குறைக்கு ஆண்டுக்கணக்காக அகதிகளாகவே பலரும் வாழ்ந்திருக்கிறார்கள். இப்போதும் அகதி வாழ்க்கை தொடருகிறது. அகதிகளாக இருப்போருக்கு தொழில் கிடையாது. அதனால், வருமானம் இல்லை.
இன்னும் பல கிராமங்களும் பொருளாதார வளமுடைய பல பிரதேசங்களும் படைக்கட்டுப்பாட்டில், உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இருக்கின்றன. ஆகையால், இந்தப் பிரதேசங்களின் பொருளாதார வளம் அப்படியே முடக்கப்பட்டுள்ளது.
எனவே சனங்கள் கடன் பட்டே வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நிவாரணத்தை நம்பி வாழ்ந்த மக்கள் இப்போது கடனில் வாழ்கிறார்கள். கடன்பட்டுத்தான் தொழில் செய்கிறார்கள். அதைவிட வேறு வழிகளில்லை. பிச்சையெடுக்க முடியுமா, என்ன?
சனங்களின் இந்த அவல நிலையைப் பயன்படுத்தி ஏராளம் வங்கிகள் இப்போது வடக்குக் கிழக்கில் கடை விரித்திருக்கின்றன. ஒரு காலம் சேமிப்புக்குப் பேர் போன யாழ்ப்பாணம் இப்போது கடன் வாங்குவதற்குப் பேர் பெற்றிருக்கிறது.
வங்கிகள் வருகின்றன. வாரத்துக்கு ஒரு வங்கி அறிமுகமாகிறது. அறிமுகமாகும் வங்கிகள் கவர்சிகரமான கடன் திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. இதற்காக நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் கருத்தரங்குகளையும் பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறார்கள். பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் கவர்ந்திழுக்கும் படியான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
வங்கிகள் கடன் கொடுப்பதும் சனங்கள் கடன் படுவதும் புதிதில்லைத்தான். ஆனால், எந்த வழியுமில்லாத நிலையில், நிர்க்கதியாக்கப்பட்ட மக்கள் கடன்படுவதும் அந்தக் கடனுக்காக காலம் முழுக்க உழைத்து மாய வேண்டியதுமே இங்கே கவனிக்க வேண்டிய சங்கதி.
அதுவும் தங்களுடைய சொந்த நாட்டில், சொந்த ஊரில், சொந்தக் காணியில் உழைத்து எங்கிருந்தோ வருகின்றவர்களுக்கு வட்டிகட்டுவது எப்படி நியாயமாகும்?
இப்போது யாழ்ப்பாணத்தில் மட்டும் 75 க்கும் அதிகமான வங்கிகளும் கடன் வழங்கும் நிறுவனங்களும் வந்து விட்டன. அதுவும் கடந்த எட்டு மாதங்களுக்குள். இன்னும் பல நிதி நிறுவனங்கள் வருகை தரவுள்ளதாக விளம்பரங்கள் சொல்கின்றன.
போருக்குப் பின்னர், சனங்களின் மறுவாழ்வுக்குரிய நிவாரணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். சீரான புனர் நிர்மாணம் செய்யப்பட்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடுகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதெல்லாம் நடக்கவேயில்லை.
குறைந்த பட்சம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு பற்றி எந்தத் தரப்பினாலும் ஆக்க பூர்வமாக சிந்திக்கப்படவில்லை.
வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் தமிழர் தரப்புப் பிரதிநிதிகள் எவரும் ஜனாதிபதியுடனோ, அரசாங்கத்துடனோ இது குறித்து பேசியதாக இல்லை. அப்படி ஒரு கோரிக்கையையும் கவனத்தையும் முன்னரே ஏற்படுத்தியிருந்தால், சிலவேளை பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைப் பற்றிய அக்கறையோடு வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கலாம்.
இனப்பிரச்சினையின் தீர்வுக்காக பேசுகின்றோம், அகதிகளின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்காக சந்திக்கிறோம் என்று கூறுகின்ற தமிழ்ப் பிரதிநிதிகள் வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கு முன்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதிப்புகளைப் பற்றியும் அவர்களுடைய மறுவாழ்வைப் பற்றியும் கதைப்பதற்குச் சிந்திக்காமல் விட்டது எதற்காக?
இதில், அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுகின்ற அரசியற் கட்சிகளும் அடங்கும். அரசாங்கத்துக்கு வெளியே செயற்படுகின்ற கட்சிகளும் சேர்த்தி. வரவு செலவுத்திட்ட விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தபோது இந்தக் கட்சிகள் அங்கே நடந்து கொண்ட விதமும் பேசிய பேச்சுகளும் சிரிப்புக்கிடமானவையாகவே இருந்தன.
எவரும் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் விதமாக, சனங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும் பாதிப்புகளின் மறுசீரமைப்புக்குமாக பேசிக் கொள்ளவில்லை.
இந்தக் கட்சிகள் எதுவும் அரசாங்கத்தைப் புத்திசாலித்தனமாக மடக்கிக் கொள்ளவும் இல்லை. வழமையைப் போல குற்றஞ்சாட்டியது ஒரு தரப்பு. வழமையைப் போல அரசாங்கத்தை ஆதரித்தது மறு தரப்பு. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர்.
‘சனங்கள் போரின் பாதிப்புகளில் இருந்து மீளத்துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்களோ தங்களுக்குள் குடுமிச் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று அந்த நாட்களில் ஒரு முதியவர் சொல்லிக் கவலைப்பட்டார்.
‘ஆளாளுக்கு குற்றஞ்சாட்டும் விதமாக தங்களுக்குள் கடிபட்டு, சிங்களத் தரப்பிற்கு பிடி கொடுத்ததுதான் மிச்சம். இதுதானே தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது என்றார்’ அந்த முதியவர் மேலும்.
நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக வடபகுதியிலுள்ள பெரும்பான்மையான மக்கள் கடனாளிகளாகவே இருக்கின்றனர் என்று பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலை தொடருமானால் மக்களின் வாழ்நிலை நீண்டகாலத்துக்குப் பாதிக்கப்பட்டேயிருக்கும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
நடைபெற்ற போரினால் மக்களின் வாழ்வாதார அடிப்படைகள் அழிவடைந்துள்ளன. வடபகுதியில் ஏறக்குறைய 90 வீதமான மக்கள் உழைப்பில்லாமல், வருமானமில்லாமல் நீண்டகாலமாக அகதி வாழ்க்கை வாழ நேர்ந்ததை இந்தப் பாதிப்புகளுக்கான காரணம் என்று இந்தப் பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இப்போதும் 65 வீதத்துக்கும் அதிகமானவர்கள் நிரந்தர வருமானமோ நிரந்தரத் தொழிலோ இல்லாத நிலையிலேயே வாழ்கின்றனர் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
மக்களின் சிறுகைத்தொழில் முயற்சிகள், விவசாயம், கடற்றொழில் போன்ற முக்கியமான தொழிற் துறைகள், சுயதொழில்கள் எல்லாமே சீராக மேற்கொள்ளப்படமுடியாத நிலைமை நீடித்த காரணத்தினால் மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று குறிப்பிடும் இந்தப் பொருளாதார நிபுணர்கள், வடபகுதியிலிருந்த பெருந் தொழிற்சாலைகள், உற்பத்தி மையங்கள் எல்லாம் இயங்கமுடியாத காரணங்களினால் மூடப்பட்டன. இவ்வாறு இந்த தொழில் மையங்கள் மூடப்பட்டமையின் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் தமது தொழில் வாய்ப்புகளை இழந்திருக்கின்றனர் எனவும் சொல்கிறார்கள்.
இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்திருக்க வேண்டியது அரசாங்கமே. ஆனால், அதை அது செய்யவில்லை. பதிலாக அதை மறைப்பதற்கு முற்படுகிறது. அதற்காக இலங்கை மத்திய வங்கியின் தலைமை அதிகாரிகளே வந்து கடன் திட்டங்களைப் பற்றிச் சனங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்கள்.
அரசாங்கத்தின் இயலாமையை மூடிமறைக்கும் செயல் இது. அதேவேளை சனங்களை கடனாளிகளாக்கும் குற்றச் செயல். மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குப்பதிலாக அவர்களைக் கடனாளிகளாக்கி, பெரிய நிதிநிறுவனங்களிடம் அடகு வைக்கும் செயலைச் செய்கிறார்கள்.
தவிர, மக்களுடைய சேமிப்புகளும் சொத்துகளும் வருமானம் தரக்கூடிய பயிர்களும் உடமைகளும் அழிவடைந்திருக்கின்றன. இவையெல்லாவற்றுக்குமான நட்டஈடுகள் இதுவரை வழங்கப்படவில்லை. அத்துடன் மீளத் தொழில் முயற்சிகளில் ஈடுபடவும் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும் ஒழுங்கமைக்கப்பட்ட உதவித் திட்டங்களோ மானிய ஏற்பாடுகளோ மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே இவ்வாறான ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகளால் வடக்குக் கிழக்கு மக்களுடைய பொருளாதாரம் மிகவும் சரிவைக் கண்டுள்ளது. இதனால், இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் இப்பொழுது கடனாளிகளாகவே மாறியிருக்கின்றனர் என்று இந்தக் பொருளாதார ஆய்வாளர்கள் விவரிக்கின்றனர்.
உழைப்பின் ஒரு பகுதியை எதிர்காலச் சந்ததியினருக்காகச் சேமிக்கும் கலாச்சாரத்தைக் கொண்ட வடபகுதி மக்கள் தங்களுடைய எதிர்காலத்துக்காக கடன்படும் நிலைதான் இப்போது ஏற்பட்டுள்ளது எனவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
திட்டமிடப்படாத – ஒழங்கமைக்கப்படாத - பொருளாதார நடவடிக்கைகள் தொடருமானால் இந்த மக்கள் நிரந்தரக் கடனாளிகளாகவே இருக்க வேண்டிய அபாய நிலைதான் தொடரும். அது மக்களின் சமூகக் கட்டமைப்பையும் வாழ்க்கை முறையையும் சிதைத்து விடக்கூடியது எனவும் குறிப்பிடுகின்றனர்.
ஆகவே இந்த அபாய நிலையைப் போக்குவதற்கு அனைத்து மட்டங்களிலுமுள்ள பொறுப்பு வாய்ந்தவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று இவர்கள் கேட்கின்றனர்.
ஆனால், இதைப்பற்றி ஆக்கபூர்வமாகச் சிந்திக்கும் போக்கு பொதுவாக இல்லை. ஊடகங்கள் வங்கிகளின் பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எதுவும் அதிகமாகச் சொல்வதில்லை. அவை இந்த வங்கிகளின் விளம்பரங்களில் லாபம் பெறுகின்றன. ஆகவே வங்கிகளைப் பகைத்து அந்த லாபங்களை இழக்க அவை தயாரில்லை.
இதேவேளை பல வங்கிகளும் சில உள்ளுர்ப் பொருளாதார அறிஞர்களையும் தமது கடன் அறிமுகத்திட்டங்களுக்கும் கடன் பெறுனரை ஊக்குவிக்கும் நிகழ்வுகளுக்கும் பயன்படுத்துகின்றன.
மக்களைப் பொறுத்தவரை அவர்கள் இன்னும் முள்ளிவாய்க்காலுக்குள்தான் நிற்கின்றனர். இலங்கை பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறது என்று சொல்லி இன்பம் காண்பது இருக்கட்டும்.
போரிலும் போராட்டத்திலும் தங்கள் வாழ்வைக் கழித்த இந்த மக்கள் - வடக்குக் கிழக்கின் மக்கள் இந்த அப்பட்டமான சுரண்டல் நிலையிலிருந்து எப்படி மீண்டெழுவது? எப்போது மீண்டெழுவது?
00